18

ஏனெனில், ஆசிரியர்களுக்கு சம்பளம் தருகிறோம் என்ற பெயரில்தான் அத்தனைக்கொள்ளையும் அங்கு நடக்கிறது. கல்வியைச் சேவையாய் செய்வோர் பள்ளியை நடத்தட்டும். இல்லையெனில், அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அறிவிப்பை அரசு அறிவிக்குமெனில், தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்கும்.

அதோடு, மெட்ரிக் பள்ளிகள்சர்வதேசப் பள்ளிகள், மத்தியக்கல்வி வாரியப்பள்ளிகள் என பலவிதமான பள்ளிகளும் ஒழியும். அனைவருக்கும் சமமானசீரான கல்வி எனும் சமச்சீர் கல்வி நிலை உருவாகும். காசிருப்பவனுக்கு தனிக்கல்வி எனும் ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்படும். ஆக, அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம், ஒரே கல்வி முறை என்கையில் அரசுப்பள்ளிகளை தரத்தில் உயர்ந்த பள்ளிகளாக நிச்சயம் மாற்ற இயலும்.

ஆக, ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 36 ஆயிரம் கோடி என்பதைச் செலவழிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்? இலவசங்களுக்காக சுமார் ஐம்பதாயிரம் கோடியை வருடந்தோறும் செலவழிக்கும் அரசு அனைவருக்கும் சமமானசீரான கல்விக்காக 36 ஆயிரம் கோடியை ஏன் ஒதுக்கக்கூடாது? கல்விக்காக வசூலிக்கப்படும் இரண்டு சதவீத வரியை ஏன் முழுமையாய் கல்விக்கு ஒதுக்குவதில்லை? கேட்டால் இவ்வளவு பெரிய செலவை அரசு செய்ய இயலாது என்பார்கள். ஆனால், ஏன் செலவழிக்க முடியாது எனக்காரணம் கேட்டால் மட்டும் சொல்லவே மாட்டார்கள்.

ஏதோ குத்துமதிப்பா ஒரு கணக்குபோட்டு சொல்லும் கணக்கும் அல்ல இது. இந்தியாவில் அமைக்கப்பட்ட கல்வி ஆணையங்களும், கல்வியாளர்களும், பல அமைப்புகளும் சொல்லும் கணக்குதான் இது. மாநில அரசு கல்விக்கு என முப்பது சத நிதியும், மத்திய அரசு பத்து சத நிதியும் ஒதுக்கவேண்டும் என்பதுதான் பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கையாகும். ஆனால், 66 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், அரசின் வருமானமும், பட்ஜெட் தொகையும் பல மடங்கு உயர்ந்துள்ள சூழலிலும், ஏன் கல்விக்கென தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை?

ஆம். அரசு இதை ஒரு செலவாக மட்டுமே பார்க்கிறது. ஆனால், இது தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனம் ஆகும். மிக்ஸி கொடுப்பதால் குடும்பம் முன்னேறும் என்று நினைக்கும் அரசு, அக்குடும்பத்தின் தலைமுறை தலைமுறைக்குமான கல்வியை இலவசமாக அளிப்பதற்கான உத்திரவாதத்தை மட்டும் உருவாக்க ஏன் தயங்குகிறது? எதற்கெடுத்தாலும், சிங்கப்பூர், அமெரிக்கா எனச்சொல்லும் ஆட்சியாளர்கள் அங்கு பள்ளிக்கல்வி என்பது முழுக்க, முழுக்க அரசின் கட்டுப்பாட்டில், அரசின் செலவில் தான் தரப்படுகிறது என்பதை தெரியாதவர்களா என்ன?

அமைச்சர் வீட்டுப்பிள்ளையாய் இருந்தாலும் சரி, கூலித்தொழிலாளி வீட்டுப்பிள்ளையாய் இருந்தாலும் சரி, அந்தக் குழந்தையின் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் பள்ளி எதுவோ அங்குதான் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற நடைமுறையே உலகின் பல நாடுகளில் உள்ள நடைமுறை என்பதைத் தெரியாதவர்களா என்ன? வீட்டை மாற்றிச்சென்றாலும், உயர்கல்விக்கு சென்றாலும் எந்த இடத்தில் வசிக்கிறோமோ அந்த இடத்தில் உள்ள பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கான இடம் உறுதி என்ற நிலையிருந்தால் பெற்றோர்கள் ஏன் அங்குமிங்கும் அலையப்போகிறார்கள்? ஆம். இதுதான் உலக நாடுகளில் உள்ள பள்ளிக்கல்வி முறையாகும்.

பல நாடுகளில் பள்ளிக் கல்வியின் தரத்தை ஒப்பிடும் பி..எஸ்.. என்ற உலகளாவிய கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட 74 நாடுகளில் இந்தியாவின் இடம் 73. இந்தத் தரவரிசையில் உயர்ந்து நிற்கும் அனைத்து நாடுகளும் பேதங்களற்ற, இலவசப் பொதுப் பள்ளிகள் வழியாக மட்டுமே கல்வி அளிக்கும் நாடுகள். இந்த நாடுகள் சோஷலிஸ நாடுகள் அல்ல; முதலாளித்துவ நாடுகள்தான். சமத்துவத்தில் நம்பிக்கையற்ற முதலாளித்துவ நாடுகள் ஏன் அனைத்துக் குழந்தைகளும் சமமான, இலவசக் கல்வி பெறும் அமைப்பை பல காலமாக ஏற்றிருக்கின்றன?

காரணம், ஒரு நாட்டின் மனித வளம் முழுவதும் ஆற்றல் பெற்ற சக்தியாக எழ வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளும் சமதரக் கல்வி பெற வேண்டும். இந்த நாடுகளின் வளர்ச்சிக்கான அடித்தளமே இத்தகைய கல்வி அமைப்புதான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க! Copyright © 2015 by இல. சண்முகசுந்தரம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book