11 அத்தியாயம் 11

உங்களுக்கு எவ்வளவு காசுள்ளதோ அதற்கேற்ப உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கல்வி கொடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு காசிருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும். இல்லையெனில், வேறென்ன வழி?

கருணை உள்ளத்தோடு, தாயுள்ளத்தோடு, தந்தையுள்ளத்தோடு, இரக்க உள்ளம் படைத்த ஆட்சியாளர்கள், மனம் நிறைந்து அள்ளிக்கொடுக்கும் பென்சிலையும், செருப்பையும் இன்னபிற அட்லஸ் மேப்பையும் பெற்றுக்கொண்டு அரசுப்பள்ளியில் படிக்கவேண்டியது தான்.

சொல்லுங்கள். இதுதான் அரசுப்பள்ளிகளை முன்னேற்றும் முறையா? அரசுப்பள்ளிகளை முன்னேற்ற அரசு ஒன்றும் புதிய திட்டங்களல்லாம் போட வேண்டியதில்லை. ஏற்கனவே அரசு போட்ட திட்டங்களையும், சட்டங்களையும், அரசாணைகளையும் நிறைவேற்றினாலே போதும்.

உதாரணத்துக்கு சிலவற்றைப் பார்ப்போம்.

ஒரு அரசுப்பள்ளியையும், தனியார் பள்ளியையும் நேரடியாய் சென்று பார்த்தோமல்லவா. இப்போது அதே பள்ளிகளுக்கு மீண்டும் செல்வோம். வாருங்கள்.

தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரும், கழிப்பறையும், கேண்டீனும், நடைபாதையும் கொஞ்சம் சுத்தமாய் இருப்பது உண்மைதான். ஆனால், அந்த அடுக்குமாடிக்கட்டிடங்களை கொஞ்சம் உற்றுப்பாருங்கள். அது பாதுகாப்பானது தானா என்று பல பள்ளிகளுக்கும் சென்று ஆய்ந்து பாருங்கள். ஒரு உண்மை புரியும்.

தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போன்று கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன தனியார் பள்ளிகளில். மாடிகளுக்கான படிகள் குறுகியதாய், நடைபாதைகளும் குறுகியதாய் தான் இருக்கின்றன பெரும்பாலான பள்ளிகளில். இ எஜிகேசன் அதாவது, கணினி மூலம் கல்வி கொடுக்கிறார்களாம். நெக்ஸ் ஜெனரேசன் எஜுகேசன், அதாவது, அடுத்த தலைமுறைக்கல்வி என்றும் அட்டகாசமாய் ஒரு பேனர் நமது குழந்தைகளையெல்லாம் போட்டு வைத்திருப்பார்கள். பாருங்கள். அந்தப் பேனருக்கே காசு கொடுக்கலாம் போங்கள்.

சரி. அதெல்லாம் பள்ளியில் எங்கே இருக்கிறது தேடிப்பாருங்களேன். உண்மை புரியும். இ லேப், அதாவது கணினி ஆய்வகம் என்ற ஒரு அறை இருக்கும். (குளிர் சாதான அறையில் என்று நீங்களே போட்டு வாசித்துக்கொள்ளுங்கள்.) அந்த அறையில் கொஞ்சம் கணினிகள் வைத்திருப்பார்கள். அதில் ஒரு திரையும் தொங்கவிட்டிருப்பார்கள். அதற்கென ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கூட செய்திருப்பார்கள். ஆனால், கணினிக்கல்வி?

கொடுப்பார்கள். அவ்வப்போது ஒவ்வொரு குழந்தையையும் அதில் உட்கார வைத்து சில பள்ளிகளில் கொஞ்சம் சொல்லியும் கொடுப்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறைக்கான கல்வி என்பதெல்லாம் வெறும் கப்சா தான். எல்லா வகுப்பறைகளிலும் கணினிப்பலகை மூலம் கல்வி கொடுப்பதாய் சொல்லும் விளம்பரங்கள் எல்லாமே பொய்தான். காசன்றி வேறு நோக்கமில்லா கலப்புப் பொய்கள் அவை.

ஒரு ஆசிரியையை நிறுத்தி அவர்களின் சம்பளம் என்ன என்று கேட்டுப்பாருங்கள். அந்தக் கொடுமையை எதுக்கு கேக்கணும்? அதுதான் எல்லாத் தமிழருக்கும், எல்லாத் தமிழச்சிகளுக்கும் தெரியும் என்கிறீர்களா? ஆமாம். இரண்டாயிரம் துவங்கி வழங்கப்படும் அந்த ஊதியத்தைப் பெறும் அவர்கள், ஒரு ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுக்கும் என்றால் அந்தப்பள்ளியைத்தானே தேடிச்செல்வார்கள். அது தானே இயல்பு. நியாயமும் அதுதானே. படித்தவர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒரு பள்ளி எப்படி நேர்மையான பள்ளியாக இருக்கமுடியும்? அந்தப்பள்ளியில் நீதியை சொல்லித்தருவார்களா?

எந்தப்பள்ளியிலாவது அங்குள்ள அனைத்து ஆசிரியர்களின் கல்வித்தகுதியும் பெற்றோர்களுக்கு தரப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். கேட்டால் போதும், ஏதோ ஆசிரியர்களை அவமானப்படுத்தியது போன்று நிர்வாகங்களே கிளப்பிவிடுவார்கள் பிரச்னையை. அது இருக்கு, இது இருக்கு, இங்க இருக்கு, அங்க இருக்கு, தென்னிந்தியாவில இங்க மட்டும் தான் இருக்கு, உலகத்தரத்துக்கு இருக்கு என்றெல்லாம் விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள், ஆசிரியர்களின் கல்வித்தகுதியை மட்டும் ஏன் வெளியிடுவதில்லை?

License

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *