13 அத்தியாயம் 13

நமது வரிப்பணத்தில், நமது அரசால், நமக்கென ஒரு பள்ளி நடத்தப்படுகையில் நாம் ஏன் காசுகொடுத்து நம்ம பிள்ளைய தனியார் பள்ளியில சேர்க்கணும்? அதுவும், எந்த சட்டத்தையும் மதிக்காத பள்ளிக்கூடத்துல, கல்வியை வியாபாரமா நடத்துற பள்ளிக்கூடத்துல எதுக்கு நம்ம குழந்தைய சேர்க்கணும்? இது பெற்றோர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. அரச மட்டும் குறை சொல்லிக்கிட்டே இருக்காம, அந்த அரச தேர்ந்தெடுக்கும் பெற்றோர்களும் கொஞ்சம் யோசிக்கணுமா இல்லீங்களா?

எல்லாம் சரிதாங்க. ஆனால், அரசுப்பள்ளியில் படித்தால் குழந்தைகள் கெட்டுப்போய்விடுகிறார்களே என்றும் சிலர் ஆதங்கப்படலாம். ஆம். இன்று பலர் அப்படியும் நினைக்கிறார்கள். ஏதோ அரசுப்பள்ளியில் படித்தால் குழந்தைகளுக்கு லோக்கல் லேங்குவேஜ்( இதுக்கு உள்ளூர் மொழி என்று அர்த்தமில்லேங்க, கெட்ட வார்த்தைன்னு அர்த்தமாம்) வந்துவிடும் என்று நினைக்கும் பெற்றோர்களும் அதிகம். இது ஆதாரமற்ற ஒரு எண்ணமாகும், இன்னும் சொல்லப்போனால், திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒரு மோசடிப் பிரச்சாரமாகும்.

என்னமோ, மெட்ரிக்பள்ளியில எல்லாம் குபேரன் வீட்டுக்குழந்தைங்க மட்டும் தான் படிக்கிற மாதிரியும், அரசுப்பள்ளியில எல்லாம் ஒண்ணுமில்லாதவங்க வீட்டுக்குழந்தைங்க மட்டும் தான் படிக்கிற மாதிரியும் பேசப்படுவது இந்தியா போன்ற ஏழைகள் நாட்டில் எவ்வளவு பெரிய மோசடி என்று நினைத்துப்பாருங்கள். ஒரே தெருவுல, ஒரே ஊருக்குள்ளே, அடுத்தடுத்த வீட்டுல உள்ள குழந்தைங்க தான் அரசுப்பள்ளியிலும் படிக்குது, தனியார் பள்ளியிலும் படிக்குது. அதில, எப்படிங்க மொழி மட்டும் மாறும்? கெட்ட வார்த்தைகளுக்கு என தனிப்பாடம் ஏதும் அரசுப்பள்ளியில் இருக்கிறதா என்ன? தனியார் பள்ளியில படிக்கிற எல்லாக்குழந்தையும் அமெரிக்கன் ஆங்கிலத்திலா பேசுகின்றன? பெற்றோர் மற்றும் சமூகத்துடன் உள்ள மொழியில் இருந்துதானே குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். இதில் அரசுப்பள்ளிகளை குறை சொல்வதில் என்ன பலன்?

இன்னும் சொல்லப்போனால், தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் தான் நுகர்வுவெறி அதிகமாக காணப்படுகிறது. அத்தோடு, ஆரோக்கியமற்ற எண்ணமும், உடல்நலமும் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும் தனியார் பள்ளியில் தான் அதிகம். மேலும், சமூக உணர்விலிருந்து விலகி நிற்பதும், சுய எண்ணமும் அதிகம் வளர்க்கப்படுவது தனியார் பள்ளியில் தான். ஆனால், அரசுப்பள்ளிகள் அப்படியல்ல. அதன் கட்டமைப்பிலேயே அவை பொது எண்ணத்தை வளர்க்கும் இயல்புடையவை.

மேலும், சில செய்திகளையும் கொஞ்சம் அசை போட்டுப்பாருங்கள். தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே அதிக தற்கொலைகளும், அதிக குற்றச்செயல்களும், வீட்டை விட்டு ஓடிப்போகுதலும் அதிகமாகி வருகிறதே, காரணம் என்ன? தனியார் பள்ளிகள் மாணவர்களை குழந்தைகளாகவே கருதுவதில்லை. பாடத்தை ஊட்டி விடுபவர் ஆசிரியர். அதை வாயிலும், காதிலும் நிறைய வாங்கி, மதிப்பெண்களாக உற்பத்தி செய்பவனே சிறந்த மாணவன். இது தானே தனியார் பள்ளியின் கொள்கை. இதில் ஒரு மாணவனின் சமூக ஆளுமையும், சமூகப்பொறுப்பும் எங்கே இருக்கிறது? மதிப்பெண்ணை மட்டுமே மனதில் கொண்டு வளர்க்கப்படுகையில் தாங்கள் படும் வேதனைகளால் உருக்குலைந்து போகும் அக்குழந்தைகள் கடைசியில் குற்றச்செயல்களுக்கும் தள்ளப்படுகிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் தற்கொலைக்கு உள்ளாகும் மாணவ, மாணவியரில் அதிகம்பேர் தனியார் பள்ளிகளில் இருந்து வந்தோர் தான் என்பதுதானே உண்மை!

குறிப்பாக, இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கொள்ளை மற்றும் கொலைச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பகுதி தனியார் கல்லூரி மாணவர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் தான் என்பதை சொல்லித்தர வேண்டியதில்லை. ஆக, அரசுப்பள்ளிகள் குறித்து மட்டும் தவறாக நினைக்கும் பெற்றோர்கள் தங்களின் எண்ணத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, தனியார் பள்ளிகளின் நிகழ்ந்த படுகொலைகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கும்பகோணம் சரஸ்வதி பெயரிலும், கிருஷ்ணா பெயரிலும் ஒரே வளாகத்தில் செயல்பட்ட பள்ளியில் 94 குழந்தைகள் தீக்கிரையாக்கப்பட்டதே, அது கல்வி வியாபாரத்தின் விளைவுதானே?

License

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *